'கனவு நனவானது'... நடிகர் விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி பதிவு...!
|நடிகர் அமீர் கானின் மகள் ஐரா கானின் திருமண வரவேற்பு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது.
மும்பை,
'வெண்ணிலா கபடி குழு', 'குள்ளநரி கூட்டம்', 'நீர்ப்பறவை', 'ராட்சசன்', 'கட்டா குஸ்தி' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லால் சலாம்' படத்தில் நடித்து வருகிறார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் அடுத்த மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் நடிகர் அமீர் கானின் மகள் ஐரா கானின் திருமண வரவேற்பு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் முகேஷ் அம்பானி, சச்சின் டெண்டுல்கர், நடிகர் சூர்யா, நாக சைதன்யா, கத்ரீனா கைப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் விஷ்ணு விஷாலும் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்திருந்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் அந்த பதிவில், 'ஒரு கிரிக்கெட் வீரராக எனது ஐடலை சந்திக்க வேண்டும் என்ற எனது கனவு நனவாகியது. அவருடன் உரையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கிரிக்கெட் கடவுளை சந்தித்தது எனக்கு மிகப்பெரிய அனுபவம்' என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.