நகைச்சுவை நடிகர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள் - சிவகார்த்திகேயன்
|நகைச்சுவை நடிகர்களை எப்போதும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என கருடன் திரைப்பட டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'கருடன்' படத்தில், சூரி நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இந்த படத்திற்கு வெற்றிமாறன் கதை எழுத, சூரியுடன் இணைந்து சசிகுமார், சமுத்திரக்கனி, உன்னிமுகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார்.
இந்த படமானது வருகின்ற மே 31-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குனர் வெற்றிமாறன், சூரி, சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் இணைந்து சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோரும் கலந்து பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், "சீமராஜா படப்பிடிப்பின் போது கிடைத்த சிறிய இடைவெளியில் சூரி அண்ணனிடம் கதையின் நாயகனாக சில கதைகளை தேர்வு செய்து நடிக்க கூறினேன். ஆனால் அவர் தயங்கினார். பிறகு சிறிது காலம் கழித்து என்னை அழித்த சூரி, இயக்குநர் வெற்றிமாறன் தன்னை முதன்மை பாத்திரத்தில் வைத்து படம் இயக்க இருப்பதாக தெரிவித்தார். அவர் கூறிவிட்டார், ஆனால் எனக்கு பதட்டமாக இருக்கிறது. அவர் இயக்கத்தில் நடிக்க சற்று தயக்கமாக இருப்பதாக தெரிவித்தார். அவருடன் முதல் படம் இருக்கட்டும், அடுத்து யார் இந்த மாதிரி படம் எடுப்பார்கள் என்று தயங்கினார். அவரிடம் கண்ணை மூடிக்கொண்டு அவர் சொல்லும் படி நடிக்க சொன்னேன்.
காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பவர்களால் எமோஷன், சீரியஸ் வேடங்களில் எளிதாக நடித்துவிட முடியும். காமெடி நடிகர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். அதற்கு இன்னொரு உதாரணம் சூரி அண்ணன். காமெடி நடிகர்களால் சீரியஸ் கதாபாத்திரங்களில் நடித்துவிட முடியும். ஆனால், சீரியஸ் கதாபாத்திரம் நடிப்பவர்களால் காமெடி வேடங்களில் நடித்துவிட முடியாது. அது மிகவும் கடினமானது," என்று தெரிவித்தார்.