கணவர் வித்யாசாகர் இறப்பு குறித்து தவறான கருத்துகளை பதிவிட வேண்டாம் - நடிகை மீனா வேண்டுகோள்
|கணவர் வித்யாசாகர் இறப்பு குறித்து தவறான கருத்துகளை பதிவிட வேண்டாம் என்று நடிகை மீனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் ஜூன் 28-ந் தேதி இரவு காலமானார். 48 வயதாகும் இவருக்கு சில தினங்களுக்கு முன் திடீரென நுரையீரலில் தொற்று அதிகமானதால், நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உறுப்புகள் கிடைக்காத நிலையில், ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழந்து சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் உயிரிழந்தார்.
அவரது உடல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மேலும் திரைப்பிரபலங்கள் பலர் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். வித்யாசாகரின் உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது இறுதி சடங்கு முடிந்ததும் உடல் தகனம் செய்யப்பட்டது.
மீனாவின் கணவர் இறந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும் திரையுலகினர் பலரும் தங்கள் ஆறுதலை மீனாவிற்கு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், கணவர் வித்யாசாகரின் மரணம் குறித்து பல வதந்திகள் வெளியாகின நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகை மீனா வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
"எனது கணவர் வித்யாசாகரின் இழப்பால் நான் மிகவும் வருத்தத்தில் இருக்கிறேன். அனைத்து ஊடகங்களும் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளித்து இந்தச் சூழலுக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்தில் மேலும் தவறான செய்திகளை பரப்புவதை தயவு செய்து நிறுத்துங்கள்.
இந்த இக்கட்டான கால கட்டத்தில், எங்கள் குடும்பத்துடன் நின்று உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களால் இயன்றவரை முயற்சித்த அனைத்து மருத்துவக் குழுவினருக்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுகாதார அமைச்சர், ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், சக ஊழியர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், ஊடகங்கள் மற்றும் அன்பு மற்றும் பிரார்த்தனைகளை அனுப்பிய என் அன்பு ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.