வேதனையில் படுத்து விடாதீர்கள். இவ்வுலகம் ஏறி மிதித்து விட்டு போகுமே தவிர ஆறுதல் சொல்லாது - இயக்குனர் செல்வராகவன்
|இயக்குனர் செல்வராகவனின் டுவீட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை,
இயக்குனர் செல்வராகவன் கடைசியாக தனுஷ் நடித்து இயக்கிய ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். அடுத்து செல்வராகவன் புதிய படத்தை இயக்கவுள்ளார், அதற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது.
இது தவிர செல்வராகவன் சமூக வலைத்தளப் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நபர். தனக்கு தோன்றும் கருத்துகளையும் , அறிவுறைகளையும், சிந்தனைகளையும் அவ்வப்போது பகிர்ந்து வருவார். சில வாரங்களுக்குமுன் மூட நம்பிக்கை பேச்சாளர் மகா விஷ்ணு குறித்து விமர்சனம் செய்து இருந்தார்.
அதைத் தொடர்ந்து தற்பொழுது மற்றொரு கருத்தை அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் 'காதல் தோல்வியோ , மனைவியுடன் சிக்கலோ , வேலையில் பிரச்சனையோ எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள். இவ்வுலகம் ஏறி மிதித்து விட்டு போகுமே தவிர ஆறுதல் சொல்லாது. செருப்பை போட்டுக் கொண்டு கடமையை செய்ய கிளம்பி விடுங்கள்' என கூறியுள்ளார். இந்த டுவீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.