'லேடி சூப்பர் ஸ்டார்' என்று என்னை அழைக்க வேண்டாம்... ரசிகர்களுக்கு நடிகை நயன்தாரா வேண்டுகோள்...!
|லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் ரசிகர்கள் எனக்கு கொடுத்த அன்பு என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கும் நயன்தாரா அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். சமீபத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்த 'ஜவான்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அறிமுகமான முதல் இந்தி படத்திலேயே நயன்தாரா பெரிய அளவில் பேசப்பட்டு விட்டார்.
டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து மணந்து வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றெடுத்த நடிகை நயன்தாரா திரைப்படங்களில் நடிப்பதோடு, சொந்தமாக பல தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அழகு சாதனப்பொருட்களை சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'அன்னபூரணி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் புரோமஷனுக்காக நயன்தாரா சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அவர் அதில் தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர், "என் வாழ்க்கையை திரும்பி பார்க்கும்போது, பரவாயில்லையே ஓரளவு எனக்கான வேலையை சரியாக செய்திருக்கிறேன் என்று சந்தோஷமாக இருக்கிறது. நடிக்க வந்த புதிதில் எனக்கு எதுவுமே தெரியாது. இப்போது ஓரளவு அந்த அறிவு வந்திருக்கிறது என்று நம்புகிறேன். கடின உழைப்பை தாண்டி ஆசீர்வாதங்களும் முக்கியம்.
சுயமரியாதை சார்ந்த விஷயங்களில் நான் ரொம்ப கவனமாக இருப்பேன். அதை மட்டும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன். எப்போதுமே மாஸ் ஆன படங்களை கொடுக்க முடியாது. ஆனால் நல்ல படங்களை தரலாம். அந்தவகையில் எனக்கு நிறைய பொறுப்பு இருப்பதாகவே நினைக்கிறேன்.
'லேடி சூப்பர் ஸ்டார்' என்று சொன்னாலே சிலர் திட்டுகிறார்கள். என்னை யாரும் அப்படி அழைக்க வேண்டாம். இன்னும் அந்த இடத்துக்கு நான் வரவில்லையா அல்லது நான் ஒரு பெண்ணாக இருப்பதால் இப்படி ஒரு பட்டம் இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்களா? என்று தெரியவில்லை.
லேடி சூப்பர் ஸ்டார் என்றால் 10 பேர் பெருமையாக பேசுகிற நேரத்தில், பலர் அதை விமர்சிக்கிறார்கள். என் பயணம் அந்த பட்டத்தை நோக்கி கிடையாது. அந்த பட்டம் ரசிகர்கள் எனக்கு கொடுத்த அன்பு' என்று பேசியுள்ளார்.