'அநியாயத்துக்கு நல்லவராக இருக்கக்கூடாது' - ஐஸ்வர்யா ராஜேஷ்
|அநியாயத்துக்கு நல்லவராக இருக்கக்கூடாது என்பதை என் அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் அன்னையர் தினத்தையொட்டி வாழ்க்கையில் தனது அம்மா பட்ட கஷ்டங்கள் குறித்து பகிர்ந்தார். அவர் கூறும்போது,
"கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவ கேரண்டி கொடுத்து என் அப்பா சிலருக்கு கடன் வாங்கி கொடுத்தார். உடல்நிலை சரியில்லாமல் எனது தந்தை இறந்ததும் அந்த கடன் எல்லாம் என் அம்மா மீதுதான் விழுந்தது.
எங்களுக்கு இருந்த ஒரு பிளாட்டை விற்று யாரோ வாங்கிய கடனை என் அம்மா கட்டினார். அவ்வளவு கஷ்டத்திலும் எங்களை நல்ல பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்தார். எங்களை எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கொண்டார்.
என் அண்ணன்கள் இருவரின் படிப்பு முடிந்து வேலையில் சேரப்போகிறார்கள் என்று நினைத்தபோது அவர்கள் இருவருமே ஒரு விபத்தில் இறந்து விட்டார்கள். ஏற்கனவே கஷ்டத்தில் இருந்த என் அம்மா இதனால் தாங்க முடியாத துயரத்தை அனுபவித்தார். ஆனாலும் தன்னம்பிக்கை இழக்கவில்லை.
தொழில்ரீதியாக எனக்கு எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டாலும் தைரியமாக முன்னுக்கு செல்வதை என் அம்மாவிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அநியாயத்துக்கு நல்லவராக இருக்கக்கூடாது என்பதை என் அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்டேன்'' என்றார்