பர்ஹான் அக்தர் இயக்கத்தில் உருவாகும் டான் - 3... ரன்வீர் சிங் ஹீரோவாக நடிப்பதாக தகவல்...!
|'டான்' படத்தின் மூன்றாம் பாகத்தில் ரன்வீர் சிங் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
மும்பை,
பாலிவுட் இயக்குநர் சந்திரா பரோட் இயக்கத்தில் 1978-ம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் 'டான்' திரைப்படம் ரிலீசானது. இந்தப் படம் அப்போது ரஜினியை வைத்து 'பில்லா' என்று தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதன் பின்னர் இந்தியில் ஷாருக்கானை வைத்து 2006-ல் 'டான்' படத்தின் முதல் பாகத்தையும், 2011- ல் இரண்டாம் பாகத்தையும் இயக்குநர் பர்ஹான் அக்தர் இயக்கி இருந்தார்.
இதனிடையே பல வருடங்களுக்குப் பின் 'டான்' படத்தின் 3ம் பாகம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த பாகத்தில் ஷாருக்கான் நடிக்க மாட்டார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் 'டான்' மூன்றாம் பாகத்தில் ரன்வீர் சிங் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. ரித்தேஷ் சித்வானியின் எக்ஸெல் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ரன்வீர் சிங் 'தில் தடக்னே தோ', 'கல்லி' பாய் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளதால் இந்தப் படத்தில் அவரை நடிக்க வைப்பதாகக் கூறப்படுகிறது.
புதிய டானாக ரன்வீர் நடிக்க உள்ளார் என்று ஷாருக்கானுக்கும் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது ஷாருக்கான் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.