ராஜராஜ சோழன் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பது தேவைதானா...?-நடிகர் சரத்குமார் கேள்வி
|மனிதன் விண்வெளிக்கு பாதை அமைக்க திட்டமிடும் போது நமக்கு ராஜராஜ சோழன் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பது தேவைதானா? என நடிகர் சரத்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை
பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.
தற்போது பொன்னியின் செல்வனை வைத்து ராஜராஜ சோழன் இந்து மதத்தை சேர்ந்தவர் என ஒருதரப்பினரும், இல்லை என ஒருதரப்பினரும் மோதி கொள்ள தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், நடிகர் சரத்குமார் அறிக்கை ஒன்றை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அதில், சைவ சமயம் இருந்தது உண்மை, வைணவ சமயம் இருந்தது உண்மை அந்த சமயங்களை இந்து சமயத்தில் இணைத்தது உண்மை எனும் போது இதற்கு மேல் என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மாமன்னன் ராஜராஜ சோழன் இந்துவா? சைவமா? வைணவமா? என்ற சர்ச்சை நாட்டிற்கு தேவைதானா? என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோழி முதலில் வந்ததா இல்லை முட்டை வந்ததா என ஆராய்ச்சி செய்து என்ன சாதிக்க போகிறோம். காலத்திற்கேற்ற ஆட்சியமைப்பு, ஒருங்கிணைப்பு, வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாதது. அப்போது, ஹோமோசேப்பியன்ஸ் என்றிருந்த மனித இனத்தை இன்றும் அவ்வாறு அழைக்கிறோமா என தெரிவித்துள்ளார்.
அவரவர் நம்பிக்கைக்கேற்ப இறைவனை வழிபட்டு மதச்சார்பின்மையுடன் செயல்படும் நாட்டில், தொடர்ந்து சர்ச்சைகளை எழுப்புவது வேதனைக்குரியது என தெரிவித்துள்ள அவர், நாளைய மனிதன் விண்வெளிக்கு பாதை அமைக்க திட்டமிடும் போது, ராஜராஜ சோழன் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்று விவாதிக்காமல் மாபெரும் புகழ்மிக்க தஞ்சை பெரிய கோயிலை அர்ப்பணித்த ராஜராஜ சோழனின் புகழை உலகின் எட்டுத்திக்கும் எடுத்துச் செல்வதில் இந்த ஆர்வம் இருந்தால் சிறப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.