தெலுங்கில் ஒதுங்கினேனா? வதந்திக்கு விளக்கம் அளித்த கீர்த்தி சுரேஷ்
|"தமிழ் படங்கள், தெலுங்கு படங்கள் என்று பிரித்து பார்ப்பது இல்லை" என்று வதந்திக்கு விளக்கம் அளித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக தெலுங்கு படங்களில் நடிக்க முக்கியத்துவம் அளிப்பதாகவும், தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டதாகவும் வலைத்தளங்களில் தகவல் பரவியது. கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நடித்த குட்லக் சகி ஜனவரியில் வந்தது. மகேஷ்பாபு ஜோடியாக நடித்த சர்காரு வாரி பாட்டா தெலுங்கு படம் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. தற்போது சிரஞ்சீவியுடன் போலோ சங்கர், நானியுடன் தசரா ஆகிய படங்களில் நடிக்கிறார்.
தெலுங்கு படங்கள் பக்கம் ஒதுங்கிவிட்டீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்து கீர்த்தி சுரேஷ் கூறும்போது, "நான் தெலுங்கு படங்களில் மட்டும் நடிக்கவில்லை. தமிழ் படங்களிலும் நடிக்கிறேன். மகேஷ்பாபுவுடன் நடித்த பிறகு பல தெலுங்கு படங்கள் வந்துள்ளன. நான் தமிழ் படங்கள், தெலுங்கு படங்கள் என்று பிரித்து பார்ப்பது இல்லை. நான் நடித்த சாணி காகிதம் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. தமிழில் விஜய், விஜய்சேதுபதி, கார்த்தி, ஜெயம்ரவி படங்களில் நடிக்க காத்து இருக்கிறேன். மணிரத்னம், ராஜமவுலி இயக்கத்தில் நடிக்கவும் ஆசை உள்ளது'' என்றார்.