''ஆஸ்கார் விருது கிடைக்காதது வருத்தமா?'' - டைரக்டர் மணிரத்னம்
|மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் 2-ம் பாகம் வருகிற 28-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்தநிலையில் படத்தில் நடித்துள்ள கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம்பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா மற்றும் மணிரத்னம் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது மணிரத்னம் கூறும்போது, ''பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் முதல் பாகத்தை விட சிறப்பாக இருக்கும். கல்கி எழுதிய கதையில் மாற்றம் செய்யவில்லை. அனைத்தையும் காட்சிக்குள் கொண்டுவர முயன்றுள்ளோம்'' என்றார். தொடர்ந்து மணிரத்னத்திடம் உங்களுக்கு பின்னால் வந்தவர்கள் ஆஸ்கார் விருதை வென்றுள்ளனர். தமிழ், இந்தியில் சிறந்த படங்களை எடுத்து இருக்கும் உங்களுக்கு ஆஸ்கார் போன்ற உயரிய விருது கிடைக்கவில்லை என்ற வருத்தம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பியபோது ''எனக்கு விருது கிடைக்கவில்லை என்று எந்த வருத்தமும் இல்லை. எனக்கு அடுத்த படம் கிடைத்தால் போதும்'' என்றார். 'பொன்னியின் செல்வன் 2 படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்புவீர்களா?'' என்று கேட்டபோது, ''முதலில் உங்களுக்குக் காட்டுகிறேன்'' என்றார்.
கார்த்தி கூறும்போது. ''பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது பெருமையாக உள்ளது. இந்தப்படத்தை இதுவரை தியேட்டருக்கு வராதவர்களெல்லாம் வந்து பார்த்தனர். எனது காதல் காட்சிகள் பிரமாதமாக இருந்தன. 2-ம் பாகம் இன்னும் சிறப்பாக இருக்கும்'' என்றார்.