தமிழில் பிடித்த நடிகையென்று ஸ்ரீலீலா யாரை கூறினார் தெரியுமா?
|தமிழில் பிடித்த நடிகை யார் என்ற கேள்விக்கு ஸ்ரீலீலா பதிலளித்தார்.
சென்னை,
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. இவர் 2019-ம் ஆண்டு வெளியான 'கிஸ்' திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றியை அளித்தது.
இதையடுத்து அவருக்கு கன்னடத்தில் வாய்ப்புகள் குவிந்தன. 2021-ம் ஆண்டு 'பெல்லி சான்டட்' என்ற படத்தின் மூலமாக தெலுங்கில் அறிமுகமானார் ஸ்ரீலீலா.
தற்போது பவன்கல்யாண், நந்தமுரி பால கிருஷ்ணா, விஜய் தேவரகொண்டா ஆகியோர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில், குண்டூர் காரம் படத்தில் நடித்தார். அதில், 'குர்ச்சி மாடதபெட்டி' பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களைக் கிறங்கடித்தார்.
இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் சிறப்பு விருந்தினராக நடிகை ஸ்ரீலீலா கலந்துகொண்டார். அப்போது அவரிடம் திரை வாழ்க்கை குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன.
அதில், தமிழில் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்ரீலீலா "நடிகை நயன்தாரா" என்றார். உடனே, "ஒருவரை மட்டும் எப்படி குறிப்பிட்டு சொல்லமுடியும், இங்கு முன்னுதாரணமாக நிறைய பேர் இருக்கிறார்கள்" என்றார்.