பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் கதாநாயகி யார் தெரியுமா?
|நாட்டாமை திரைப்படத்தில் டீச்சராக நடித்திருந்த ராணியின் மகள், பொன்ராம் இயக்கும் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார்.
சென்னை,
கடந்த 2015ம் ஆண்டு தமிழில் வெளியான "சகாப்தம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரை உலகில் களமிறங்கியவர் தான், மறைந்த கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். இப்போது "படைத்தலைவன்" என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ஒன்றில், நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சண்முக பாண்டியன். இந்த திரைப்படத்தை ஸ்டார் சினிமாஸ் என்கின்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது, இது அவர்களுடைய முதல் தயாரிப்பாகும்.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்த படத்தில் சண்முக பாண்டியனுடன் இணைந்து நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் காளி வெங்கட், முனீஸ்காந்த் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். பாலசுப்பிரமணியம் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இப்படம் நகைச்சுவை கலந்த அதிரடி ஆக்சன் படமாக உருவாகிறது. அந்த வகையில் உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி ஆகிய பகுதிகளை சுற்றி இருக்கும் கிராமங்களையும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையையும் பின்னணியாக கொண்டே படம் உருவாகிறது.
மேலும் இந்த படம் குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த படத்தில் சண்முக பாண்டியன் ரௌடியாக நடித்து வருகிறாராம். அடுத்தது இந்த படத்தில் தார்னிகா என்ற புதுமுக நடிகை கதாநாயகியாக நடிக்கிறாராம். தார்னிகா என்பவர் வேறு யாருமில்லை. நாட்டாமை திரைப்படத்தில் டீச்சராக நடித்திருந்த ராணியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.