விவாகரத்து எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது - அமீர்கானின் முன்னாள் மனைவி
|விவாகரத்துக்கு பிறகு நான் தனியாக இருப்பதாக கருதவில்லை என்று அமீர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் கூறியுள்ளார்.
மும்பை,
இந்தி நடிகர் அமீர்கானும், இயக்குனர் கிரண் ராவும் காதலித்து 2005-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆசாத் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் 2021-ல் அமீர்கானும், கிரண்ராவும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.
தற்போது விவாகரத்து பெற்றது குறித்து கிரண் ராவ் கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது. ''விவாகரத்து எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. வருடங்கள் செல்ல செல்ல மனிதர்களின் மனநிலை மாறுகிறது. நமக்கு பிடித்தமான விஷயங்களும் மாறுகிறது.
அதன்படி விவாகரத்து எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்று கருதினேன். விவாகரத்தும் பெற்றேன். விவாகரத்துக்கு பிறகு நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சியான விவாகரத்து. விவாகரத்துக்கு பிறகு நான் தனியாக இருப்பதாக கருதவில்லை. எனது குடும்பத்தினர் ஆதரவாக இருக்கிறார்கள். மகனும் என்னுடன் இருக்கிறான். அமீர்கானை மணப்பதற்கு முன்பு கூட நான் தனியாக மகிழ்ச்சியாகவே இருந்தேன்'' என்றார்.