விடுதலை பட குழுவினர் அனைவருக்கும் தங்க காசு வழங்கிய இயக்குநர் வெற்றிமாறன்
|விடுதலை பட வெற்றியை அடுத்து, படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இயக்குநர் வெற்றிமாறன் தங்க காசு வழங்கி உள்ளார்.
சென்னை,
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'விடுதலை'. கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் மற்றும் பவானி ஆகியோர் முக்கிய வேடங்களை ஏற்று உள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார்.
ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. சமூக மற்றும் அரசியல் சார்ந்த விசயங்களை மையப்படுத்தி, கிரைம், திரில், அதிரடி காட்சிகளுடன் படம் வெளிவந்து உள்ளது.
இந்த படத்திற்கு ரசிகர்கள் பலரிடம் இருந்து நேர்மறையான விமர்சனங்கள் வந்து உள்ளன. 2 நாட்களில் படம் ரூ.8 கோடி வரை வசூலித்து உள்ளது. விரைவில் வசூல் ரூ.50 கோடி எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விடுதலை பட வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ள இயக்குநர் வெற்றிமாறன், பட குழுவினர் அனைவருக்கும் தங்க காசு வழங்கி உள்ளார். இந்த படத்தின் 2-ம் பாகம் வருகிற செப்டம்பரில் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.