'வின்னர்' படம் உருவான விதம் குறித்து இயக்குனர் சுந்தர்.சி பகிர்ந்த தகவல்
|இயக்குனர் சுந்தர் சி, தெலுங்கு திரைப்படங்கள் குறித்த தனது அனுபவத்தை மிகவும் காமெடியாக கூறியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிரபல இயக்குனர் சுந்தர் சி. உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், உன்னை தேடி, அன்பே சிவம், வின்னர், கிரி, கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை, ஆம்பல, அரண்மனை 2, ஆக்சன் , கலகலப்பு 2, உள்ளிட்டவை அவரது குறிப்பிடத்தக்க படங்களாகும். நகைச்சுவையாக படங்கள் இயக்கி ரசிகர்கள் மனங்களை கவர்ந்தார். தற்போது இவர் இயக்கிய 'அரண்மனை 4' படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், 'அரண்மனை 4' படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இயக்குனர் சுந்தர்.சி பேசியதாவது:
ஒரு தயாரிப்பாளர் என்னை ஒரு படம் பண்ணலாம் என அழைத்தார். அப்போது ஹிட்டான தெலுங்கு திரைப்படங்களை 'ரீமேக்' செய்யலாம் என கூறினார். நானும் அந்த தெலுங்கு படத்தை பார்த்தேன். அப்படத்தை பார்த்த போது நான் அதிர்ச்சியடைந்தேன். அதில் என்னுடைய 3 படங்களை காப்பியடித்து அந்த தெலுங்கு படம் எடுக்கப்பட்டுள்ளது.
"என்னுடைய படங்களை உரிமம் வாங்காமல் 'காப்பி' அடித்து தெலுங்கில் படம் எடுத்தார்கள். அதற்கு பழி தீர்க்கும் வகையில் 4 படங்களை காப்பி அடித்து உருவாக்கிய படம்தான் 'வின்னர்'.
'வின்னர்' படத்தில் கதாநாயகி ஆபத்தில் இருப்பது போல் கத்தியவுடன், காப்பாற்ற நடிகர் பிரஷாந்த் ஓடி வருவார். அப்போது குறுக்கே வடிவேலு 'வந்துட்டேன்' என கத்திகொண்டே ஓடி வந்து அந்த கோலிக்குண்டுகள் இருக்கும் மேட் மீது கால் வைத்து, ஒரு பந்து போல் அங்கும் இங்கும் அடிவாங்கி கீழே விழுவார். இப்படி தான் அந்த காட்சியை நான் மாற்றி அமைத்திருந்தேன்".
இப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த பிறகு, சில நாட்கள் கழித்து நான் ஒரு தெலுங்கு படத்தின் காட்சியை பார்த்தேன். அந்த தெலுங்கு படத்தில் 'வின்னர்' படத்தில் வடிவேலு வழுக்கி விழும் காட்சியை அப்படியே காப்பியடித்து வைத்து இருந்தனர்".
நானே தெலுங்கில் இருந்து தான் அந்த காட்சியை காப்பியடித்து சில மாற்றங்களுடன் படம் எடுத்து இருந்தேன். இது தெரியாமல், வின்னர் படத்திலிருந்து அந்த காட்சியை காப்பியடித்து தெலுங்கில் ஒரு படத்தை எடுத்துள்ளனர்" என தெரிவித்தார்.