கவுரவ டாக்டர் பட்டம் பெறும் இயக்குனர் சங்கர்..!
|வேல்ஸ் பல்கலைக்கழகம் இயக்குனர் சங்கருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது.
சென்னை,
'ஜென்டில்மேன்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சங்கர். பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்றுள்ள சங்கர் இந்தியன், காதலன், ஜீன்ஸ், சிவாஜி, எந்திரன், 2.0 உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது சங்கர் தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து 'ராம்சரண் 15' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ளார். இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வேல்ஸ் பல்கலைக்கழகம் இயக்குனர் சங்கருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. பல்லாவரத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் வருகிற ஆகஸ்ட் 5-ம் தேதி இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. மேலும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. டாக்டர் பட்டம் பெற இருக்கும் இயக்குனர் ஷங்கருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.