< Back
சினிமா செய்திகள்
மாயன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சினிமா செய்திகள்

"மாயன்" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
9 Aug 2024 4:28 PM IST

ராஜேஷ் கன்னா இயக்கியுள்ள "மாயன்" படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

சிறப்பான கதை மற்றும் தொழில்நுட்ப குழுவின் நேர்த்தியான படைப்பு அதை வெற்றி படமாக மாற்றும். இந்த வரிசையில் "மாயன்" திரைப்படம் நிச்சயம் இணையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நேரடியாக ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் மாயன். இந்த படம் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் மொழியிலும் வெளியிடப்பட உள்ளது. பேண்டஸி, திரில்லர் மற்றும் வரலாறு என மூன்றுவித ஜானரில் நகரும் வகையில், இந்த படத்தின் கதை எழுதப்பட்டு இருக்கிறது. இவை அனைத்தும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களாக ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன.

இந்திய திரையுலகில் உருவாக்கப்பட்டதிலேயே அதிக கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த திரைப்படமாக "மாயன்" உள்ளது. இந்த படத்தின் 50 சதவீதத்திற்கும் அதிகமான காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டு உள்ளன. இதற்காக டிஜிட்டல் புரொடக்சன் செய்யப்பட்டது. 2 பதிப்புகளாக மாயன் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஒன்று, மாயன் காலண்டர் மற்றும் உலகின் முடிவு பற்றியும், இரண்டு, உலகம் அழிந்ததா இல்லையா? மாயனுக்கும் கடவுளுக்கும் என்ன சம்மந்தம் என்பது பற்றி உருவாக்கி இருக்கிறார்கள். முதல் பதிப்பை விட இரண்டாம் பதிப்பில் கூடுதல் கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ராஜேஷ் கன்னா எழுதி, இயக்கி இருக்கும் "மாயன்" படத்தை பாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ஜி.வி.கே.எம். எலிபன்ட் பிக்சர்ஸ் டாட்டோ கணேஷ் மோகன சுந்தரம் இந்த படத்தை இணைந்து தயாரித்துள்ளார். இந்த படத்தில் வினோத் மோகன் மற்றும் பிந்து மாதவி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆங்கில பதிப்பில் பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இவர்கள் தவிர பியா பாஜ்பாய், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், சாய் தீனா, கஞ்சா கருப்பு, ராஜ சிம்மன், ஶ்ரீ ரஞ்சனி, ரஞ்சனா நாச்சியார், கே.கே. மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு எம்.எஸ். ஜோன்ஸ் ரூபெர்ட் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கே. அருண் பிரசாத், படத்தொகுப்பு பணிகளை எம்.ஆர். ராஜேஷ் மேற்கொண்டுள்ளனர்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. "மாயன்" படம் வரும் செப்டம்பர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்