'ரேஷன் அரிசி வாங்கவே வக்கில்லாதபோது, பேஷன் ஷோ எதற்கு?' - இயக்குனர் பார்த்திபன் ஆதங்கம்
|மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயக்குனர் பார்த்திபன் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.
சென்னை,
'மிக்ஜம்' புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். சின்னத்திரை நட்சத்திரங்கள் பாலா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இவர்களை போலவே மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயக்குனர் பார்த்திபன் சைதாப்பேட்டை பனகல் மாளிகை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். அவர் அதுகுறித்த விடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். த(க)ண்ணீர் தேசம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
இயக்குனர் பார்த்திபன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இதுகுறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அவர் அதில், 'இந்தியா என்ற சுரங்கத்திற்குள் இருந்து இத்தனை கோடி உயிர்களை மீட்க முடியாத இழிநிலையில் சுதந்திர தின மூவர்ண பல்லி மிட்டாய்களும், குடியரசுதின பைக் சாகச கொண்டாட்ட செலவினங்கள் எதற்கு? ரேஷன் அரிசி வாங்கவே வக்கில்லாதபோது, பேஷன் ஷோ எதற்கு? இப்படி நூறாயிரம் கேள்விகளில் தூக்கம் தொலைந்தது' என்று ஆதங்கத்துடன் பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலர், இதற்கு காரணமான அரசை நேரடியாக கண்டித்து பதிவிடலாமே..? என் இப்படி மறைமுகமாக பதிவிடுகிறீர்கள்..? என்று பல கேள்விகளை எழுப்பினர். பலரும் இந்த பதிவை விமர்சித்து கருத்துகளை பதிவிட்டனர். இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் பார்த்திபன் புதிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், 'தேர்ந்தெடுக்கும் உடைகளில் ஒருவரது நாகரீகமும், பயன்படுத்தும் வார்த்தைகளில் அவர்களது தரமும் விளங்கும். என் கருத்து யாரையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். அது தனிநபர் தாக்குதலோ,ஒரு கட்சி சார்ந்த சாடலோ அல்ல.சுதந்திர இந்தியாவை இதுவரை பல கட்சிகள் ஆண்டுள்ளன. இன்றைய நிலைக்கு இதுவரை யாவும் காரணம். இது மாற… இனியொரு விதி செய்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார் .