< Back
சினிமா செய்திகள்
இது முத்தழகிற்கு நடந்ததை விட மிகப்பெரிய கொடுமை - அமீருக்கு ஆதரவாக குரல் எழுப்பிய இயக்குனர் நந்தா பெரியசாமி
சினிமா செய்திகள்

'இது முத்தழகிற்கு நடந்ததை விட மிகப்பெரிய கொடுமை' - அமீருக்கு ஆதரவாக குரல் எழுப்பிய இயக்குனர் நந்தா பெரியசாமி

தினத்தந்தி
|
1 Dec 2023 12:05 PM GMT

பருத்திவீரன் விவகாரத்தில் இயக்குனர் அமீருக்கு ஆதரவாக நந்தா பெரியசாமி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

'பருத்தி வீரன்' படத்தின்போது நடந்த பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து பரிமாற்றம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக திரைத்துறையை சேர்ந்த சிலரும், இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சிலரும் தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையடுத்து இயக்குனர் அமீர் குறித்த பேச்சுக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர், 'பருத்தி வீரன் பிரச்சினை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே 'அமீர் அண்ணா' என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன் நான்.

அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தின. அதற்கு பதில் அளிக்கும்போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்" என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே நடிகர் சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் இந்த அறிக்கையை விமர்சித்து பதிவிட்டனர். எந்த பொது வெளியில் குற்றம் சாட்டினாரோ அதே பொது வெளியில் ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அமீருக்கு ஆதரவாக இயக்குனர் நந்தா பெரியசாமி பதிவிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், 'பருத்தி வீரன் படத்தில் முத்தழகிற்கு நடந்த கொடுமையை விட மிகப்பெரிய வன்முறையை அதன் இயக்குநர் அமீருக்கு நடத்தியிருக்கிறார்கள்... கார்த்தி என்ற பருத்திவீரனை நம்பிய முத்தழகின் முடிவு வேண்டுமானால் துயரத்தில் முடியலாம். இயக்குநர் அமீருக்கு அப்படியல்ல... அவர் இன்னும் வீறு கொண்டு எழுவார்.

படைக்கு அஞ்சாத அவருக்கு கை கோர்க்க தம்பிமார்கள் பலரும் இருக்கிறோம்... தொழுகை தவறாத அவர் அருகே இறைவனும் சத்தியமும் இருக்கிறது. பகைவனுக்கும் அருள்கின்ற அவர் புன்னகை இன்னும் அவரை பலமாக்கும். துரோகமற்ற பல பருத்தி வீரன்களை அவர் இனி தொடர்ந்து படைப்பார். மாசற்ற ஒரு அற்புதமான மனிதனுக்காக நாம் ஒன்று கூடுவோம்... அவர் பக்கம் துணை நிற்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்