< Back
சினிமா செய்திகள்
கொட்டுக்காளி படத்தை பாராட்டிய இயக்குநர் மிஷ்கின்
சினிமா செய்திகள்

'கொட்டுக்காளி' படத்தை பாராட்டிய இயக்குநர் மிஷ்கின்

தினத்தந்தி
|
13 Aug 2024 3:12 PM IST

இயக்குநர் மிஷ்கின் கொட்டுக்காளி திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் உருவெடுத்து பல படங்களை தனது எஸ்கே புரோடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். அந்த வகையில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி எனும் திரைப்படத்தையும் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இந்த படத்தை கூழாங்கல் படத்தின் இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்கியுள்ளார்.

இதில் சூரியுடன் இணைந்து அன்னா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூரி இந்த படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் இந்த படமானது ரிலீஸுக்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடம் பாராட்டுகளை பெற்றது.

நடிகர்கள் சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடித்த கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. கூழாங்கல் படத்தை இயக்கிய வினோத் ராஜ் இயக்கிய இப்படம் வருகிற 23ம் தேதி திரைக்கு வருகிறது.

.இதன், டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் பேசிய இயக்குநர் மிஷ்கின், "வினோத் ராஜ் என்னை சந்தித்தபோது கூழாங்கல் வெளியாகவில்லை. அடுத்ததாக, என்ன படம் எடுக்கப்போகிறாய் என கேட்டேன். கொட்டுக்காளியை எடுத்துக்கொண்டிருப்பதாகக் கூறி, இசையமைப்பாளர் என யாரும் இப்படத்திற்கு இல்லை என்றார். அப்போது, வினோத்தை மிகவும் திமிர்பிடித்தவன் என நினைத்தேன். கொட்டுக்காளி திரைப்படத்தைப் பார்த்ததிலிருந்து பேய் பிடித்ததுபோல் இருக்கிறேன். தன் படத்தை வைத்தே அவன் என்னை செருப்பால் அடித்துவிட்டான். இந்தப் படம் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்பதற்காக நான் நிர்வாணமாக நிற்கவும், நடனமாடவும் தயார். இப்படத்தில், சூரியைத் தவிர வேறு யாராலும் நடித்திருக்க முடியாது. இந்தப் படத்திற்குப் பிறகு சூரியை மிகச்சிறந்த நடிகராக பார்க்கலாம். கொட்டுக்காளி பெரிய அனுபவம். இதைத் தயாரித்த, நடிகர் சிவகார்த்திகேயன் கொண்டாடப்பட வேண்டியவர். தெய்வத்தன்மையும் தாய்மையும் கொண்ட இப்படத்தை நாம் கைவிடக்கூடாது" என புகழ்ந்து பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்