கொரோனா பாதிப்பு காரணமாக இயக்குனர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி..!
|இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:
தமிழ் திரையுலகில் சுமார் 40 ஆண்டுகளாக வெற்றிகளை குவிக்கும் இயக்குனராக வலம் வருகிறார் மணிரத்னம். இவர் தற்போது தனது கனவு படமான பொன்னியின் செல்வன் என்கிற கல்கியின் வரலாற்று நாவலை தழுவிய படத்தை இயக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இதில் கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயராம், பிரபு, பார்த்திபன், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் படபிடிப்பு முடிந்து ரிலீஸ் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.