லட்சுமி ராமகிருஷ்ணனின் 5-வது படம் 'ஆர் யூ ஓகே பேபி'
|லட்சுமி ராமகிருஷ்ணன் ‘ஆர் யூ ஓகே பேபி' படத்தை இயக்கி வருகிறார். படத்தில் சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் நடிக்கிறார்கள்.
தமிழ் பட உலகில் அம்மா வேடங்களில் நடித்து வரும் லட்சுமி ராமகிருஷ்ணன், சொந்தப் படங்களை தயாரித்து இயக்கியும் வருகிறார். அவர் இதுவரை, 'ஆரோகணம்', 'நெருங்கி வா முத்தமிடாதே', 'அம்மணி', 'ஹவுஸ் ஓனர்' ஆகிய 4 படங்களை இயக்கியிருக்கிறார். சில வருட இடைவெளிக்குப்பின், அவர் மீண்டும் ஒரு படத்தை தயாரித்து இயக்க முடிவு செய்து இருக்கிறார். இந்த புதிய படத்துக்கு, 'ஆர் யூ ஓகே பேபி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதில் அபிராமி, சமுத்திரக்கனி, மிஷ்கின், 'ஆடுகளம்' நரேன், ரோபோ சங்கர், வினோதினி ஆகியோர் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்க, லட்சுமி ராமகிருஷ்ணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார். படத்தின் தயாரிப்பாளரும் இவரே. படப்பிடிப்பு சென்னை, ராஜபாளையம், கேரள மாநிலம் கொச்சி ஆகிய இடங்களில் நடந்தது. பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது.
"இது, ஒரு குழந்தையை பற்றிய படம். குழந்தை பாதுகாப்பு பற்றி படம் பேசும். இதுவரை நான் இயக்கிய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக இது இருக்கும்" என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறினார்.