கதாநாயகனாக நடிக்கும் டைரக்டர் கவுதமன்
|மீண்டும் ‘மாவீரா’ என்ற புதிய படத்தை கவுதமன் இயக்கி கதாநாயகனாக நடிக்கிறார். இதுக்குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
'கனவே கலையாதே', 'மகிழ்ச்சி' ஆகிய படங்களை இயக்கியவர் கவுதமன். 'மகிழ்ச்சி' படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். சில வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் 'மாவீரா' என்ற புதிய படத்தை கவுதமன் இயக்குகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, "தமிழ் மண்ணில் வாழ்ந்த மாவீரர்களின் வரலாற்றை படைப்பாக்கி தருவதே என் லட்சியம்.
மாவீரா படமும் தமிழர் களின் தொன்மை, வீரம், அறம், ஈரம் போன்றவற்றை சொல்லும் படமாக இருக்கும். அத்து மீறினால் யுத்தம் என்ற இலக்கோடு மண்ணையும் மானத்தையும் காத்த ஒரு மாவீரனின் வாழ்க்கை பற்றிய உண்மை சம்பவமாக இந்தப் படம் தயாராகிறது. படத்துக்கு கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுத, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். குறள் அமுதன், உமாதேவன் தயாரிக்கின்றனர். மாவீரா படத்தை இயக்குவதோடு, நானே அதில் கதாநாயகனாகவும் நடிக்கிறேன். படத்தில் நடிக்கும் இதர நடிகர்- நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்" என்றார்.