விஜய்யின் வாரிசு படப்பிடிப்புக்கு எதிர்ப்பு
|வாரிசு படப்பிடிப்பு விசாகபட்டினத்திலும், வாத்தி படப்பிடிப்பு ஐதராபாத்திலும் நடந்து வருகிறது. இந்த 2 படங்களின் படப்பிடிப்புகளையும் நிறுத்தும்படி தெலுங்கு பட அதிபர்கள் வற்புறுத்தி உள்ளனர்.
தெலுங்கு நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வலியுறுத்தி தெலுங்கு படப்பிடிப்புகளை தயாரிப்பாளர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.
கொரோனா பரவலுக்கு பிறகு தியேட்டர்களுக்கு படம் பார்க்க வரும் ரசிகர்கள் எண்ணிக்கை குறைந்து சினிமா தொழில் நசிந்துள்ளது. ஆனாலும் தெலுங்கு நடிகர்கள் சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சம்பளத்தை குறைக்க வலியுறுத்தி கடந்த 1-ந்தேதி முதல் தெலுங்கு படப்பிடிப்புகளை தயாரிப்பாளர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் விஜய், தனுஷ் படங்களின் படப்பிடிப்புகளை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்துவதாக சில தெலுங்கு தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். விஜய்யை வைத்து தமிழில் வாரிசு, தெலுங்கில் வாரிசுடு என்ற பெயர்களில் புதிய படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜுவும், தனுசை வைத்து தமிழில் வாத்தி, தெலுங்கில் சர் என்ற பெயர்களில் தயாராகும் படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் நாக வம்சியும் தயாரிக்கிறார்கள்.
வாரிசு படப்பிடிப்பு விசாகபட்டினத்திலும், வாத்தி படப்பிடிப்பு ஐதராபாத்திலும் நடந்து வருகிறது. இந்த 2 படங்களின் படப்பிடிப்புகளையும் நிறுத்தும்படி தெலுங்கு பட அதிபர்கள் வற்புறுத்தி உள்ளனர்.
தயாரிப்பாளர் தில்ராஜு கூறும்போது, ''ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்க நான் தயாரிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி விட்டேன். ஆனால் விஜய் நடிக்கும் வாரிசு தமிழ் படம் என்பதால் படப்பிடிப்பை நிறுத்தவில்லை" என்றார்.