என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை... பேச்சாளரை கோழை என்று சாடிய குஷ்பு
|பேச்சாளர் சைதை சாதிக் கோழை என்றும், தன்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்று நடிகை குஷ்பு சாடியுள்ளார். இதுகுறித்து டுவிட்டர் குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:-
சென்னையில் கடந்த மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக் பேசும்போது நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி குறித்து சர்ச்சை கருத்துகளை தெரிவித்தார். அவதூறாக பேசியதாக அவருக்கு எதிராக அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி நடிகைகளிடம் மன்னிப்பு கேட்கும் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நடிகைகளிடம் மன்னிப்பு கேட்டும், இனிமேல் இதுபோல் பேசமாட்டேன் என்றும் சைதை சாதிக் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதி நிபந்தனை முன்ஜாமீன் வழங்கினார். இந்த நிலையில் சைதை சாதிக் தன்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்று குஷ்பு சாடியுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில், ''அவர் இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. என்னையும், எனது சகாக்களையும் அவமதித்த மேடையில் அவர் மன்னிப்பு கேட்கட்டும். கோழை. அவர் அதை ஒருபோதும் செய்யமாட்டார்" என்று கூறியுள்ளார்.