மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த பாலிவுட் நடிகை - இதுதான் காரணமா?
|மணிரத்னம் படம் ஒன்றில் நடிக்க, சோனம் கபூர் மறுப்பு தெரிவித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
சென்னை,
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைளில் ஒருவர், சோனம் கபூர். இவர் தமிழ், இந்தியில் வெளியான 'ராஞ்சனா' படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து இருந்தார்.
முன்னதாக வெளியான மணிரத்னம் படம் ஒன்றில் நடிக்க, சோனம் கபூர் மறுப்பு தெரிவித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த படம் 'கடல்'. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். கதாநாயகியாக நடிகை ராதாவின் மகள் துளசி நாயர் நடித்திருந்தார்.
மேலும், அர்ஜுன், அரவிந்த் சாமி, லட்சுமி மஞ்சு, தம்பி ராமையா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் தெலுங்கிலும் மொழிபெயர்க்கப்பட்டு 'கடலி' எனும் பெயரில் வெளியிடப்பட்டது.
சமீபத்திய தகவலின்படி, இப்படத்தில் நடிக்க சோனம் கபூரை மணிரத்னம் அணுகியுள்ளார். ஆனால் சில காரணங்களுக்காக அதில் நடிக்க மறுத்துள்ளாராம். அதில் மொழி ஒரு காரணமாக கூறப்படுகிறது. சோனம் கபூரின் தந்தை அனில் கபூர் நடிக்க கூறியும் இப்படத்தில் நடிக்கவில்லையாம்.