< Back
சினிமா செய்திகள்
திருமணத்துக்காக மதம் மாறினேன் என்பதா? நடிகை குஷ்பு காட்டம்
சினிமா செய்திகள்

திருமணத்துக்காக மதம் மாறினேன் என்பதா? நடிகை குஷ்பு காட்டம்

தினத்தந்தி
|
9 May 2023 6:04 AM IST

தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் குஷ்பு. இவர் 2000-ம் ஆண்டு டைரக்டர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

குஷ்பு தற்போது பா.ஜனதாவில் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் இருக்கிறார். சமூக அரசியல் குறித்து வலைத்தளத்தில் அவ்வப்போது கருத்துகள் பதிவிட்டும் வருகிறார்.

இந்த நிலையில் சுந்தர்.சியை திருமணம் செய்து கொள்வதற்காக குஷ்பு மதம் மாறினார் என்று சிலர் கடந்த சில நாட்களாக வலைத்தளத்தில் தகவல் பரப்பி வருகிறார்கள். இதற்கு குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில், "எனது திருமணம் குறித்து கேள்வி கேட்பவர்களும் அல்லது திருமணம் செய்து கொள்வதற்காக நான் மதம் மாறினேன் என்று சொல்பவர்களும் தயவு செய்து கொஞ்சம் அறிவையும், கல்வியையும் பயன்படுத்துங்கள். நமது நாட்டில் சிறப்பு திருமண சட்டம் என்று ஒன்று இருப்பதை அவர்கள் அறியாதது வருத்தம்.

நான் மதம் மாறவும் இல்லை. என்னை மதம் மாறும்படி யாரும் கூறவும் இல்லை. எனது 23 வருட திருமண வாழ்க்கையானது காதல், சமத்துவம், மரியாதை, நம்பிக்கை அடிப்படையில் உறுதியாக இருக்கிறது'' என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்