நடிகர் சுஷாந்த் சிங் வீட்டை வாங்கினாரா நடிகை அடா ஷர்மா...? வதந்திகளுக்கு பதிலடி
|சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட வீட்டை நடிகை அடா ஷர்மா வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியது.
மும்பை,
தமிழில் இது நம்ம ஆளு, சார்லி சாப்ளின் - 2 ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை அடா ஷர்மா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் திரைக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி படத்திலும் நடித்து இருந்தார்.
இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வீட்டை அடா ஷர்மா விலைக்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் பரவின. அந்த தகவல்களை பார்த்த ரசிகர்கள் அடா ஷர்மாவை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்த வதந்திக்கு பதிலடி கொடுத்து அவர் கூறும்போது, ''என்னை பற்றி நிறைய தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. நான் இப்போது குடியிருக்கும் வீடே எனக்கு கோவிலை போன்றது. சிறுவயது முதல் இந்த வீட்டில்தான் வாழ்கிறேன். இங்கிருந்து வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்தால் அப்போது சொல்கிறேன்.
தேவையில்லாமல் ஏன் இதுபோன்ற வதந்திகளை பரப்புகிறார்கள் என்று புரியவில்லை. நடிகை என்பதால் வதந்திகள் என் வாழ்க்கையில் ஒரு பாகம் ஆகிவிட்டது. வதந்திகளை நான் கண்டுகொள்வது இல்லை. ரசிகர்களுக்கு என்னை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கலாம். ஆனாலும் எனது சொந்த விஷயங்களை எந்த அளவு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதில் ஒரு எல்லை இருக்கிறது''என்றார்.