தோனி திரைப்பட நிறுவனத்தின் முதல் படத்தின் டைட்டில் அறிவிப்பு
|தோனி திரைப்பட நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று தற்போது ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் தோனி, பல்வேறு துறைகளிலும் தடம் பதித்து வருகிறார். சென்னையின் எஃப்.சி கால்பந்து அணியின் உரிமை, ஓட்டல், உடற்பயிற்சிக் கூடம், இயற்கை விவசாயம் என பல்வேறு தொழில்களில் தோனி முனைப்பு காட்டி வருகிறார்.
அந்த வகையில் 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தோனி தொடங்கியுள்ளார். ஏற்கெனவே, 'தி ரோர் ஆஃப் தி லயன்' என்ற ஆவணப்படத்தைத் தயாரித்திருக்கும் இந்த நிறுவனம், அடுத்ததாக ஒரு நேரடி தமிழ் படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தோனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ள முதல் படத்தின் தலைப்பு மற்றும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இதுகுறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்திற்கு 'எல்.ஜி.எம்' (Lets Get Married) என்று பெயரிடப்பட்டுள்ளது.
ரமேஷ் தமிழ்மணி இயக்கும் இந்த படத்தில் நதியா, ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு ஆகியோர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.