பைக் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய தனுஷ் மகன்... அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் அதிரடி...!
|நடிகர் தனுஷின் மகன் லைசென்ஸ் இல்லாமல் பைக் ஓட்டியதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த ஒரு வருடமாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் 17 வயதான தனுஷின் மூத்த மகன் யாத்ரா பைக் ஓட்டுவது போன்ற புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் போயஸ் கார்டன் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் ஆர்15 ரக பைக்கை பயிற்சியாளர் உதவியுடன் ஓட்டி பழகுவது போன்று அந்த புகைப்படத்தில் பதிவாகியுள்ளது.
அந்த புகைப்படம் வைரலானது. அதனைத் தொடர்ந்து போக்குவரத்து போலீசார் தனுஷின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அதன்பேரில் ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறி இருசக்கர வாகனம் ஓட்டியதாக ரூ.1,000 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.