சுதா கொங்கரா இயக்கும் 'புறநானூறு' படத்தில் சூர்யாவிற்கு பதில் தனுஷ் ?
|சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த ‘புறநானூறு’திரைப்படத்தில் தனுஷ் நடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமானது மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றதனால் மீண்டும் சுதா கொங்கரா, சூர்யாவை இயக்கத் திட்டமிட்டார். அதன்படி இவர்களின் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்திற்கு புறநானூறு என்று தலைப்பு வைக்கப்பட்டது. சூர்யாவின் 43-வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை சூர்யாவே தயாரிக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்தி திணிப்பு சம்பந்தமான கதைக்களத்தில் இந்த படம் உருவாகப் போவதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தன. ஆனால் அரசியல் காரணங்களால் இந்த படத்தின் கதையை மாற்றும்படி சூர்யா, சுதா கொங்கராவிடம் சொல்ல, அதற்கு சுதா கொங்கரா மறுத்து விட்டதாகவும், இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.
எனவே புறநானூறு படம் கைவிடப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் சுதா கொங்கரா, சூர்யா இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்ட போது புறநானூறு படம் அல்லாமல் வேறொரு படத்தை இருவரும் இணைந்து பண்ணலாம் என்று சூர்யா, சுதா கொங்கராவிடம் சொன்னாராம். ஆனால் அதற்கு சுதா கொங்கரா புறநானூறு திரைப்படம்தான் என்னுடைய அடுத்த படம். நீங்கள் ஹீரோவாக நடிக்கவில்லை என்றால் வேறொரு நடிகரை நடிக்க வைப்பேன் என்று சொல்லிவிட்டாராம். இது ஒரு பக்கம் இருக்க சுதா கொங்கராவின் புறநானூறு படத்தில் நடிப்பதற்கு பிரபல நடிகர் தனுஷ் ஆர்வம் காட்டி வருவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
சூர்யா புறநானூறு படத்திலிருந்து விலகி விட்டதால் தனுஷ் அப்படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
நடிகர் தனுஷ் கைவசம் தற்போது 'ராயன்', 'குபேரா', 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' ஆகிய படங்கள் உள்ளது.