< Back
சினிமா செய்திகள்
போயஸ் கார்டன் வீடு குறித்த  சர்ச்சை பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ்
சினிமா செய்திகள்

போயஸ் கார்டன் வீடு குறித்த சர்ச்சை பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ்

தினத்தந்தி
|
7 July 2024 7:22 PM IST

போயஸ் கார்டன் சர்ச்சை குறித்து தனுஷ் கொடுத்து இருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை,

கோலிவுட்டில் மிக பிரபலமான முன்னணி நடிகராக திகழ்பவர் தனுஷ். இவர் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

பா.பாண்டி படத்தை அடுத்து தனுஷ் இயக்கி நடித்திருக்கும் 50வது படம் ராயன். ஜூலை 26-ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் அவருடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன், ஜெயராம், சந்தீப்கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. அப்போது ராயன் படம் குறித்த பல விசயங்களை வெளியிட்ட தனுஷ், போயஸ் கார்டனில் தான் வீடு வாங்கியது குறித்தும் பேசினார்.

‛ரஜினியின் வீட்டை பார்க்க வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே ஆசைப்பட்டு உள்ளேன். அப்போதிலிருந்தே போயஸ் கார்டனில் சின்னதாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் 16 வயதாக இருக்கும்போது துள்ளுவதோ இளமை படத்தில் நடித்தேன். அந்த படம் சரியாக போகாமல் இருந்தால் நான் காணாமல் போயிருப்பேன். நல்லவேளை அந்த படம் ஹிட் அடித்தது. அதன் பிறகு 20 வருட கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசுதான் போயஸ் கார்டன் வீடு'' என்று பேசினார் தனுஷ்.மேலும் தனுஷ் பேசியதாவது: நான் யாருன்னு எனக்குத் தெரியும், என்னை படைச்ச அந்த சிவனுக்குத் தெரியும், என் அம்மா அப்பாவுக்கு தெரியும், என் பசங்களுக்கு தெரியும், என் ரசிகர்களுக்கு தெரியும். ஆரம்பத்தில் இருந்தே அதிகமான பாடி சேமிங்கிற்கு ஆளானவன் நான். தேவையில்லாத வதந்திகள், கெட்டபெயர், முதுகில் குத்தும் சம்பவம் என பல விஷயங்கள் நடந்தாலும், இன்னமும் நான் இப்படி உங்கள் முன் வந்து நிற்க காரணமே நீங்கள் தான். இவ்வாறு அவர் பேசினார்.மேலும் இந்த வீட்டை தனுஷ் கட்டுவதற்கு முன்பு நடந்த பூமி பூஜையில் ரஜினிகாந்தும் கலந்து கொண்டார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகளாக அந்த வீடு கட்டப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டில் தனது பெற்றோருடன் போயஸ் கார்டன் வீட்டில் தனுஷ் குடியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தனுஷுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ரஜினிகாந்த் வீட்டில் மரியாதை கிடைக்கவில்லை என்கிற வெறியில் தான் அவர் போயஸ் கார்டனில் வீடு கட்டினார் என பலர் வீடியோக்களில் பேசி வந்த நிலையில், அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் தனுஷ் பதிலளித்துள்ளார்.

மேலும் செய்திகள்