அனுஷ்கா படத்தில் பாடிய தனுஷ்.. இணையத்தில் வைரலாகும் பாடல்
|அனுஷ்கா படத்தில் தனுஷ் பாடியுள்ள பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐதராபாத்,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளுள் முக்கியமானவர் அனுஷ்கா. அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி, பாகுபலி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அனுஷ்கா. இவர் இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றி அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
தற்போது அனுஷ்கா இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி வரும் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக நவீன் பாலிஷெட்டி நடிக்கிறார். மேலும், ஜெயசுதா, முரளி சர்மா, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அனுஷ்கா நடித்து வரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் புதிய பாடலான 'என்னடா நடக்குது' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளர் ராதன் வரிகளில் தனுஷ் பாடியுள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.