ராயன் படக்குழுவினருக்கு விருந்தளித்த நடிகர் தனுஷ்!
|ராயன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் படக்குழுவினருக்கு விருந்தளித்துள்ளார்.
சென்னை,
தனுஷ் கடந்த 2017ம் ஆண்டு வெளியான 'பவர் பாண்டி' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் உருவெடுத்தார். அதைத்தொடர்ந்து 5 வருடங்கள் கழித்து தன்னுடைய 50வது படமான ராயன் திரைப்படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தை கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஏ.ஆர்.ரகுமான் இதற்கு இசையமைத்திருந்தார். படத்தில் தனுஷ் தவிர எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், செல்வராகவன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த ஜூலை 26ம் தேதி தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.
அதேநேரம், சில சண்டைக்காட்சிகள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதால், படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்தது. இப்படம், உலகளவில் ரூ.120 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாகவும் தமிழகத்தில் மட்டும் ரூ.60 கோடியைத் தாண்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவே, நடிகர் தனுஷ் நடித்த படங்களிலேயே பெரிய வசூலைப் பெற்றிருக்கிறது.
தற்போது, தனுஷும் 50-வது படத்தில் வெற்றி பெற்றிருப்பது அவருக்கும் அவரின் ரசிகர்களுக்கும் உற்சாகத்தை அளித்துள்ளது.. இந்த நிலையில், நடிகர் தனுஷ் ராயன் வெற்றிக்காக படக்குழுவினருக்கு பிரியாணி விருந்தளித்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.