ராஞ்சனா இரண்டாம் பாகத்தில் தனுஷ்
|தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளது. அடுத்து இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் புதிய படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே இந்தியில் ராஞ்சனா படம் வெளியானது.
இந்த நிலையில் தனுஷ் நெகிழ்ச்சியோடு வெளியிட்டுள்ள அறிக்கையில். "ராஞ்சனா படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகிறது. சில படங்கள் நமது வாழ்க்கையை மாற்றக்கூடியதாக இருக்கும். அப்படி ஒரு படமாக ராஞ்சனாவை கிளாசிக் படமாக மாற்றிய ரசிகர்களுக்கு நன்றி.
ராஞ்சனா உலகில் இருந்து இன்னொரு கதையாக தேரே இஷ்க் மெய்ன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறேன். இந்த படத்துக்கான பயணம் என்ன மாதிரி இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் இது உங்களுக்கும் எங்களுக்கும் ஒரு சாகச படமாக இருக்கும்'' என்று கூறியுள்ளார்.
தனுஷ் இந்தியில் நடிக்க இருப்பது ராஞ்சனா படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கி அடுத்த வருடம் திரைக்கு வர உள்ளது.
படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதில் நடிக்கும் இதர நடிகர் நடிகைகள் விவரம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தி படத்தில் நடிக்கும் தனுஷ் தோற்றம் வெளியாகி உள்ளது.