விரைவில் 'தனி ஒருவன்' 2-ம் பாகம் உருவாகும் - நடிகர் ஜெயம் ரவி
|ஜெயம் ரவி தனி ஒருவன் 2-ம் பாகம் விரைவில் உருவாகும் என்று தற்போது அறிவித்து உள்ளார்.
ஜெயம் ரவி நடித்த 'தனி ஒருவன்' படம் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் நாயகியாக நயன்தாரா நடித்து இருந்தார். அரவிந்தசாமி வில்லனாக வந்தார். ராஜா இயக்கி இருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் வருமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். ஜெயம் ரவியும் தனி ஒருவன் 2-ம் பாகம் உருவாகும் என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தார். ஆனால் பட வேலைகள் தொடங்கவில்லை.
ஜெயம் ரவி வேறு படங்களில் நடித்து வந்தார். ராஜாவும் தெலுங்கு படம் இயக்கினார். இதனால் தனி ஒருவன் 2 கைவிடப்பட்டு விட்டதா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. இந்த நிலையில் ஜெயம் ரவி தனி ஒருவன் 2-ம் பாகம் விரைவில் உருவாகும் என்று தற்போது அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "தனி ஒருவன் 2-ம் பாகத்துக்கான கதை தயாராகிவிட்டது. பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்கு முன்பே தனி ஒருவன் 2 படத்தை எடுக்க திட்டமிட்டோம். ஆனால் நானும், இயக்குனர் ராஜாவும் வேறு பணிகளில் இருந்ததால் தாமதமானது. விரைவில் தனி ஒருவன் 2 படம் உருவாகும்'' என்றார். இது ஜெயம் ரவி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.