ரஜினியுடன் மீண்டும் நடிக்க ஆசை - நடிகை ஸ்ரேயா
|ரஜினியுடன் மீண்டும் நடிக்க ஆசை உள்ளது என சென்னையில் நடந்த கப்ஜா பட நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஸ்ரேயா திருமணத்துக்கு பின் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்து விட்டு இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். கன்னடத்தில் தயாராகி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ள 'கப்ஜா' படத்தில் நடித்து இருக்கிறார். இந்தப்படத்தை ஆர்.சந்துரு டைரக்டு செய்துள்ளார்.
சென்னையில் நடந்த கப்ஜா பட நிகழ்ச்சியில் ஸ்ரேயா பங்கேற்று பேசும்போது, "சிவாஜி படத்தில் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தை மறக்க முடியாது. ரஜினி மிகவும் எளிமையானவர். படப்பிடிப்பு அரங்கில் லைட் மேன் உள்பட அனைவருக்கும் வணக்கம் சொல்லுவார். நகைச்சுவை உணர்வு உண்டு. அவருக்குத்தெரியாத விஷயமே கிடையாது. ரஜினியுடன் நடிக்க விரும்பாதவர் யாரும் இல்லை. எனக்கு மீண்டும் ரஜினியுடன் நடிக்க ஆர்வம் உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்.
இப்போதைய சினிமா மொழி எல்லையை கடந்து பான் இந்தியா படங்களாக வருகின்றன. நல்ல கதையம்சம் உள்ள படங்களுக்கு எல்லா மொழிகளிலும் வரவேற்பு கிடைக்கும். 'கப்ஜா' நல்ல படம் 1942-ல் ஆரம்பிக்கும் கதை சுதந்திரத்துக்கு பிறகும் நடப்பதுபோல் இருக்கும், உபேந்திரா, சுதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தில் இடம்பெற்ற சிவராத்திரி பாடல் சிறப்பாக வந்துள்ளது. இந்தப்பாடல் காட்சியில் நடித்தபோது தூசியால் சளித்தொல்லை, உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டன. ஆனாலும் கஷ்டப்பட்டு நடித்தேன். படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்" என்றார்.