இன்னும் 20 ஆண்டுகள் நடிக்க ஆசை - ராஷி கன்னா
|நினைத்ததை எல்லாம் சாதிக்க இன்னும் இருபது ஆண்டுகள் சினிமா துறையில் நிலைத்திருக்க ஆசைப்படுகிறேன் என்றார் ராஷி கன்னா.
தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் அறிமுகமாகி அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 பேய் படம், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்துள்ள ராஷிகன்னா இப்போது கார்த்தி ஜோடியாக சர்தார் படத்திலும் நடித்து முடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.
ராஷிகன்னா சினிமாவுக்கு வந்து 8 வருடங்கள் நிறைவானதையடுத்து சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ''எனது சினிமா பயணம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. நான் நடித்த படங்கள் தோல்வி அடைந்த சந்தர்ப்பங்களும் நிறைய உள்ளது. நான் நிராகரித்த படங்கள் வேறு யாராவது நடித்து வெற்றி அடைந்தாலும் வருத்தப்படமாட்டேன். நேரத்துக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பேன். பள்ளி, கல்லூரிகளில் நான் வெட்கப்படும் ரகம். கலாட்டா செய்யும் பெண் அல்ல. அமைதியாகவே இருப்பேன். கோபம் அரிதாக வரும். எனது கனவு கதாபாத்திரங்கள் நிறைய உள்ளன. ஆக்சன் படம் செய்ய வேண்டும். திகில் பேய் படங்களில் நடிக்க வெண்டும் என்ற ஆசை உள்ளது. சினிமா வாழ்க்கை மிகவும் பிடித்துள்ளது. நான் நினைத்ததை எல்லாம் சாதிக்க இன்னும் இருபது ஆண்டுகள் சினிமா துறையில் நிலைத்திருக்க ஆசைப்படுகிறேன்" என்றார்.