< Back
சினிமா செய்திகள்
தென் இந்தியாவின் முதல் திரையரங்கம் இடிக்கப்படுகிறது.. வணிக வளாகமாக மாறுகிறதா டிலைட் தியேட்டர்..?
சினிமா செய்திகள்

தென் இந்தியாவின் முதல் திரையரங்கம் இடிக்கப்படுகிறது.. வணிக வளாகமாக மாறுகிறதா 'டிலைட் தியேட்டர்'..?

தினத்தந்தி
|
9 Feb 2024 7:34 AM IST

'டிலைட்' என்று பெயரிடப்பட்ட அந்த தியேட்டரை கட்டியவர் சாமிக்கண்ணு வின்சென்ட்.

கோவை,

இந்தியாவில் சினிமா நுழைந்த காலத்தில், தென் இந்தியாவில் கோவையில் அதிக அளவில் ஸ்டூடியோ, தியேட்டர்கள் அமைக்கப்பட்டன. அந்த வகையில் தென் இந்தியாவில் முதன்முதலில் கோவையில் தான் 1914-ம் ஆண்டு தியேட்டர் கட்டப்பட்டது. 'டிலைட்' என்று பெயரிடப்பட்ட அந்த தியேட்டரை கட்டியவர் சாமிக்கண்ணு வின்சென்ட்.

திருச்சியில் தென் இந்திய ரெயில்வே ஊழியராக இருந்த சாமிக்கண்ணு வின்சென்ட், பிரெஞ்சுக்காரரான டூ பாண்ட்டுவிடம் ஊமை படங்களை விலைக்கு வாங்கி காட்சிப்படுத்தி வந்தார். பின்னர், அவர் படங்களை பொதுமக்களுக்கு காட்டும் முறையில் சில புதுமைகளை அறிமுகப்படுத்தினார்.

அதில், ஒன்றுதான் துணிகளை கட்டி அமைக்கப்பட்ட டென்ட் சினிமா. காலியிடங்களில் கூடாரம் அமைத்து சினிமாக்களை காட்சிப்படுத்தினார். சாமிக்கண்ணு வின்சென்டின் டென்ட் சினிமா தமிழ்நாடு மட்டுமின்றி பர்மா, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கும் பயணித்து மக்களிடம் பிரபலமடைந்தது.

துணி கூடாரத்தை விட நிரந்தரமாக ஒரு கட்டிடம் கட்டி திரைப்படங்களை காட்ட வேண்டும் என்று எண்ணிய சாமிக்கண்ணு வின்சென்ட் கடந்த 1914-ல் 'வெரைட்டிஹால் திரையரங்கம்' என்ற பெயரில் நிரந்தர தியேட்டர் ஒன்றை கோவையில் உருவாக்கினார். அது தற்போது டிலைட் தியேட்டர் என அழைக்கப்படுகிறது.

இந்த தியேட்டரில் முதன்முதலில் வள்ளி திருமணம் படம் திரையிடப்பட்டது. தியேட்டர் இருக்கும் சாலை தற்போதும் வெரைட்டிஹால் ரோடு என்றே அழைக்கப்படுகிறது. இந்த டிலைட் தியேட்டர் தென்னிந்தியாவின் முதல் நிரந்தர தியேட்டர் என அழைக்கப்படுகிறது. நூற்றாண்டை கடந்த இந்த தியேட்டரில் தொடர்ந்து திரைப்படங்கள் திரையிடப்பட்டு வந்தன. புதிய திரைப்படங்கள் வந்தாலும், இந்த தியேட்டரில் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி, விஜயகாந்த் போன்ற நடிகர்களின் பழைய படங்கள் தான் அதிக அளவில் திரையிடப்பட்டு வந்தது.

கடந்த 2019-ம் ஆண்டு டிலைட் தியேட்டர் புதுப்பிக்கப்பட்டு எம்.ஜி.ஆர். நடித்த நினைத்ததை முடிப்பவன் படம் திரையிடப்பட்டது. அதைத்தொடர்ந்து படங்கள் திரையிடப்பட்டாலும் 2023-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு பின் இங்கு படம் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது. போதிய வருமானம் இல்லாததாலும், சரிவர பராமரிக்காததாலும் நூற்றாண்டு பழமை வாய்ந்த மற்றும் தென்னிந்தியாவின் முதல் தியேட்டரான டிலைட் தியேட்டரை இடிக்க உரிமையாளர்கள் முடிவு செய்தனர். அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

தியேட்டர் இடிக்கப்பட்டு அங்கு வணிக வளாகம் அமைக்க உள்ளதாக தெரிகிறது. வணிக வளாகம் அமைத்தால் அதில் ஒரு மினி தியேட்டர் அமைக்க வேண்டும் என்று தியேட்டரில் பணியாற்றிய ஊழியர்கள் கூறுகிறார்கள். கோவையில் பிரபலமான பட்சிராஜா ஸ்டூடியோ, சென்ட்ரல் ஸ்டூடியோ போன்ற பழமையான ஸ்டூடியோக்கள் இடிக்கப்பட்ட நிலையில், நூற்றாண்டு பழமை வாய்ந்த டிலைட் தியேட்டரும் இடிக்கப்படுவது சினிமா ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்