டிமான்டி காலனி -2 புதுசா இருக்கும்.. நாங்களே பயந்துட்டோம்.. இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.
|டிமான்டி காலனி 2 படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த படம் எங்களுக்கே பயத்தைத் தருகிறது.
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது டிமான்டி காலனி 2. இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், டிமான்டி காலனி 2 படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
விரைவில் வெளியாக இருக்கும் டிமான்டி காலனி 2 படம் குறித்து டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., "இயக்குனர் அஜய்யிடம் இருந்து ஆரம்பிக்கிறேன். ஒரு இரையைத் தவறவிட்ட மிருகத்திற்குத் தான் அடுத்த இரையில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டுமென்று தெரியும். ஒரு கலைஞனின் படைப்பு தோற்கலாம் கலைஞன் தோற்பதில்லை."
"இந்தப்படத்தில் அஜய் மிரட்டியிருக்கிறார். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளார். இந்தப்படத்தில் வேலை பார்ப்பதற்காக, நான் வேறு பல படங்களை செய்யவில்லை, கொஞ்சம் வருத்தம் தான் ஆனால் இறுதியாகப் படம் பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அஜய் கண்டிப்பாக இப்படத்தில் சிக்ஸர் அடிப்பார்."
"தயாரிப்பாளர் பாபி சார் படத்தைக் காதலித்து ரசித்து தயாரிக்கிறார். டெக்னிகல் டீம் இப்படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். சி.ஜி. எல்லாம் அருமையாக வந்துள்ளது. இப்படம் எங்களுக்கே பயத்தைத் தருகிறது, ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்," என்று தெரிவித்தார்.
இப்படத்தில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.