தாமதமாகும் புஷ்பா 2-ம் பாகம்
|திரைக்கதை மற்றும் படப்பிடிப்பை நடத்துவதற்கான இடங்கள் போன்ற காரணங்களால் புஷ்பா 2-ம் பாகம் தாமதத்துக்கு காரணம் சொல்கிறார்கள்.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்து தெலுங்கில் தயாரான புஷ்பா படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டு நல்ல வசூல் பார்த்தனர். இந்த படத்தில் சமந்தா ஆடிய ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா பாடலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. சுகுமார் இயக்கி இருந்தார். புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தனர். ரசிகர்களும் புஷ்பா இரண்டாம் பாகத்தை ஆர்வத்தோடு எதிர்பார்த்தனர். ஆனால் இதுவரை பட வேலைகள் தொடங்கப்படவில்லை. கடந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழுவினர் தரப்பில் தெரிவித்த நிலையிலும் நடக்கவில்லை. இந்த மாதம் இறுதியில் அல்லது டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் அது உறுதியாகவில்லை. திரைக்கதை முழுமையாக தயாராகவில்லை, படப்பிடிப்பை நடத்துவதற்கான இடங்களை இன்னும் தேர்வு செய்யவில்லை என்றெல்லாம் தாமதத்துக்கு காரணம் சொல்கிறார்கள்.