வலைத்தளத்தில் அவதூறு : நடிகை ரோஜா வருத்தம்
|அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாதவர்கள் தனது குடும்பத்தை குறி வைத்து வலைத்தளத்தில் அவதூறுகளை பரப்பி வருகின்றனர் என்று நடிகை ரோஜா வேதனை தெரிவித்து உள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருந்த ரோஜா, இப்போது ஆந்திர மந்திரியாக பதவி வகிக்கிறார். இந்த நிலையில் அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாதவர்கள் தனது குடும்பத்தை குறி வைக்கிறார்கள் என்று வேதனை தெரிவித்து உள்ளார். இதுகுறித்து ரோஜா அளித்துள்ள பேட்டியில். "நான் சினிமாவிலும், அரசியலிலும் எத்தனையோ பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறேன். ஆனால் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வரும் அவதூறுகள் வேதனை அளிக்கிறது. பிறந்த நாளில் எனது சகோதரர் முத்தமிட்டதை கூட ஆபாசமாக்கி அசிங்கப்படுத்தினர். இப்போது என் மகளின் போட்டோவை மார்பிங் செய்தும், என்னை பற்றியும் ஆபாசமான படங்களை வெளியிடுகிறார்கள். அதை பார்த்த என் மகள் மிகவும் வருத்தப்பட்டாள். இவையெல்லாம் நமக்கு தேவையா என்று என் முகத்தின் மீது நேரடியாக கேட்கிறாள். அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. பிரபலங்களுக்கு இவை எல்லாம் சாதாரணமாக நடப்பவைதான். இவற்றை கண்டு கொண்டால் முன்னேற முடியாது என்று என் குழந்தைகளுக்கு நானே புரியும்படி சொல்லி வருகிறேன்'' என்றார்.