பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
|உலக அளவில் பதான் படம் பெற்ற வெற்றியால் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை தீபிகா படுகோனே உணர்ச்சி வசப்பட்டு அழுதுள்ளார்.
புனே,
ஷாருக் கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் மற்றும் சல்மான் கான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பதான் படம் பல தடைகளை எதிர்கொண்டு, கடந்த 25-ந்தேதி உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், யாஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் ரூ.250 கோடி பட்ஜெட்டில், ஆக்சன், திரில்லர், நகைச்சுவை கலந்த கலவையாக படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. படத்திற்கு இசை விஷால்-சேகர்.
இந்தியாவில் பெருநகரங்களான டெல்லி, மும்பை உள்பட நாடு முழுவதும் 5 ஆயிரம் தியேட்டர்களிலும், 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் என உலக அளவில் மொத்தம் 8,500 திரையரங்குகளில் பதான் திரைப்படம் வெளியானது. இந்தி தவிர, தமிழ், தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு படம் வெளிவந்து உள்ளது. பதான் படம் 5 நாட்களில் உலகளவில் வசூலில் ரூ.550 கோடியை எட்டி பிளாக்பஸ்டராக உள்ளது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, முதன்முறையாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பட குழுவினர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில் நடிகர்கள் ஷாருக் கான், ஜான் ஆபிரகாம், நடிகை தீபிகா படுகோனே ஆகியோர் கலந்து கொண்டனர்.
திரைப்பட இயக்குனர் சித்தார்த் ஆனந்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் பேசிய நடிகை தீபிகா படுகோனே சற்று உணர்ச்சி வசப்பட்டார். கண்கலங்கியபடி அவர் பேசும்போது, உண்மையாக கூற வேண்டுமென்றால், சாதனைகளை முறியடிக்க போகிறோம் என்று நான் நினைக்கவில்லை. ஒரு நல்ல படம் உருவாக்க போனோம்.
உனக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் நபர்களுடன் பணியாற்று என ஷாருக் கான் என்னிடம் கூறினார். அவர் எனக்கு நம்பிக்கை அளித்திருக்கிறார். அது அவருக்கு கூட தெரியாது.
படத்தின் வெற்றி ஆச்சரியம் அளிக்கிறது. நாங்கள் பெறுகிற அன்பும் கூட. இது போன்றதொரு படம் நிறைய கொண்டாட்டங்களை கொண்டு வர முடியும் எனும்போது, நம்பவே முடியாத அளவுக்கு உள்ளது. ஒரு திருவிழா போன்ற உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ரசிகர்கள் அனைவரின் அன்பை பார்க்கும்போது, படம் அதற்கு தகுதியானதே என தோன்றுகிறது என அவர் கூறியுள்ளார்.