< Back
சினிமா செய்திகள்
டீப் பேக் வீடியோ விவகாரம்: ராஷ்மிகாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் திரைப்பிரபலங்கள்...!
சினிமா செய்திகள்

டீப் பேக் வீடியோ விவகாரம்: ராஷ்மிகாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் திரைப்பிரபலங்கள்...!

தினத்தந்தி
|
7 Nov 2023 4:00 AM GMT

நடிகை ராஷ்மிகா மந்தனா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது.

மும்பை,

தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். தெலுங்கு, கன்னடம், இந்தி திரையுலகிலும் பிரபல நடிகையாக இருக்கிறார். இவரது நடிப்பில் அனிமல் என்ற இந்தி படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி என பல மொழிகளில் ராஷ்மிகா பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை ராஷ்மிகா மந்தனா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. அதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் பகிர்ந்து வைரலாக்கினர். ஆனால் அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்பது தற்போது தெரியவந்துள்ளது.

நடிகை ராஷ்மிகா இதுகுறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் 'தொழில்நுட்பத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது எனக்கு பயமாக இருக்கிறது' என்று வேதனையுடன் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் சிலர் ராஷ்மிகாவிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராஷ்மிகாவிற்கு திரைப்பிரபலங்களும் சமூகவலைதளங்களில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்த கடினமான சூழ்நிலையில் ராஷ்மிகாவுடன் துணை நிற்பதாக அவர்கள் ஆதரவு குரல் எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள பாடகி சின்மயி, 'தற்போது ராஷ்மிகாவின் டீப் பேக் வீடியோ வைரலாக பரவி வருகிறது. அவர் மனவேதனையுடன் வலைதளத்தில் பதிவிட்டதை நான் பார்த்தேன். தினமும் பெண்களின் உடல்கள் சுரண்டப்படும் ஒரு நாட்டில், பெண்களை குறிவைத்து துன்புறுத்தவும் மிரட்டி பணம் பறிக்கவும் அவர்கள் பயன்படுத்தும் அடுத்த ஆயுதம் டீப் பேக். சிறுமிகளுக்கு டீப் பேக்கின் ஆபத்துகள் குறித்து அறிவுறுத்தவும், இதுபோன்ற சம்பவங்களுக்கு புகாரளிக்கவும் நாடு தழுவிய ஒரு விழிப்புணர்வு பிரசாரம் தேவைப்படுகிறது' என்று பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தெலுங்கு நடிகர் நாகசைதன்யா தனது சமூகவலைதளத்தில் ரஷ்மிகாவிற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். அவர், 'தொழில்நுட்பம் எவ்வாறு தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதை பார்க்கும்போது உண்மையிலேயே வருத்தமாக உள்ளது. இதிலிருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மற்றும் ஏதாவது ஒரு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்