பயணங்களை தவிர்க்க முடிவு... ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பிய குஷ்பு
|நடிகை குஷ்புவுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
ஆஸ்பத்திரியில் இருக்கும் புகைப்படத்துடன் வலைத்தளத்தில் குஷ்பு வெளியிட்ட பதிவில் "புளூ காய்ச்சல் மிகவும் மோசமானது. எனக்கும் அந்த காய்ச்சல் வந்துள்ளது. காய்ச்சல், உடல் வலியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். உடல் சோர்வாக இருப்பதை உணர்ந்தால் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
குஷ்பு விரைவில் குணமடைய பலரும் வலைத்தளத்தில் வாழ்த்து பதிவுகள் வெளியிட்டு வந்தனர். இந்தநிலையில் தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் குஷ்பு வெளியிட்ட பதிவில், "ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி விட்டேன். ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர். சில நாட்களுக்கு பயணங்களை தவிர்க்க வேண்டும். உடல் நலம் தொடர்பாக என்மீது அன்பு செலுத்திய அனைவருக்கும் நன்றி'' என்று கூறியுள்ளார்.