டைரக்டர் எஸ்.வி.ரமணன் மரணம்
|டைரக்டர் எஸ்.வி.ரமணன் உடல்நல குறைவு காரணமாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இல்லத்தில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80.
இவர் மறைந்த பிரபல தயாரிப்பாளரும், டைரக்டருமான கே.சுப்பிரமணியத்தின் மகன் ஆவார். பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் சகோதரர். மேடை நாடகங்களில் நடித்து கலை உலகுக்கு வந்த எஸ்.வி.ரமணன் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான பல நாடகங்களையும், ஆவணப்படங்களையும் இயக்கி உள்ளார். ரமண மகிரிஷி, ஷிரடி சாய்பாபா ஆகியோரின் ஆவண படங்களை தயாரித்துள்ளார்.
அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பான ஆயிரக்கணக்கான விளம்பர படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்தும் பிரபலமானார். 1983-ல் ஒய்.ஜி.மகேந்திரன், சுஹாசினி நடிப்பில் வெளியான உருவங்கள் மாறலாம் படத்தை எஸ்.வி.ரமணன் டைரக்டு செய்து அவரே இசையமைத்தும் இருந்தார். இதில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஜெய்சங்கர் ஆகியோர் கவுரவ தோற்றங்களில் நடித்து இருந்தனர். தெலுங்கில் 'துரை பாபு ஷோபனம்' என்ற படத்தையும் இயக்கினார்.
1966-ல் ஜெயகாந்தன் இயக்கத்தில் வெளியான 'யாருக்காக அழுதான்' படத்துக்கு இசையமைத்திருந்தார். இசையமைப்பாளர் அனிருத் இவரது பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.