மண்சார்ந்த கலாசார படங்கள் வரவேண்டும் - டைரக்டர் தங்கர்பச்சான்
|மண்சார்ந்த கலாசார படங்கள் வரவேண்டும் என்று டைரக்டர் தங்கர்பச்சான் கூறியுள்ளார்.
தங்கர் பச்சான் இயக்கத்தில் சேரன் நடித்த 'சொல்ல மறந்த கதை' படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதையொட்டி தங்கர் பச்சான் நெகிழ்ச்சியோடு வெளியிட்ட அறிக்கையில், "சொல்ல மறந்த கதை வெளியான போது கண்ணீர் கசிந்த கண்களோடு மக்கள் திரையரங்கில் இருந்து வெளியேறினார்கள். தங்கள் வீட்டு கதையாகவும், பக்கத்து வீடு, நண்பர்களின் கதையாகவும், உறவினர்களின் கதையாகவும் இருந்ததுதான் அப்படத்தின் தனிச்சிறப்பு. சிறந்த இயக்குனராக அறியப்பட்ட சேரன் நடிகராக அறிமுகமானார். சொல்ல மறந்த கதை"யை இன்றைய தலைமுறையினரும் கொண்டாடி மகிழ்கின்றனர்.
நமது மண் சார்ந்த, மக்களின் வாழ்வியலை அடிப்படையாக கொண்ட, கலாசார மற்றும் உறவு நிலைகளை உள்ளடக்கிய திரைப்படமாக இருந்ததால்தான் அது மக்களின் மனதில் ஆழமாக குடிகொண்டு விட்டது. இவ்வாறான அசல் தமிழ் திரைப்படங்களைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒரு படைப்பாளனாக மக்கள் எதிர்பார்க்கும் இது போன்ற திரைப்படத்தை உருவாக்கும் எண்ணமும், உந்துதலும் என்னை மேலும் ஆட்கொண்டு விட்டன. நான் தற்பொழுது உருவாக்கிக்கொண்டிருக்கும் 'கருமேகங்கள் கலைகின்றன' திரைப்படத்தின் மூலமாக உங்கள் அனைவரின் நம்பிக்கையையும் தக்க வைத்துக்கொள்ள முயல்கின்றேன்" என்று கூறியுள்ளார்.