என் தந்தையை சங்கி என விமர்சிப்பதா - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கோபம்
|மகளின் பேச்சை கேட்ட ரஜினிகாந்த் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கி போனார்.
சென்னை,
ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள புதிய படம் 'லால் சலாம்'. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால், கே.எஸ்.ரவிக்குமார், ஜீவிதா உள்ளிட்ட பலா் நடித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. 'லால் சலாம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் நேற்று இரவு நடந்தது.
இந்த விழாவில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால், தனுஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ், நெல்சன், தயாரிப்பாளர் தானு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியதாவது:-
இது ஒரு வித்தியாசமான கதைக்களம் கொண்ட படம். 'லால் சலாம்' படம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
நான் எனது தந்தையை பற்றி சமீபத்தில் அடிக்கடி கேட்கும் வார்த்தை சங்கி. எனக்கு இந்த வார்த்தையை கூறும்போது மிகவும் கோபமாக இருந்தது. இதை நான் உங்களிடம் சொல்ல வேண்டும், எனது தந்தை சங்கி இல்லை, அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் சங்கியாக இருந்தால் 'லால் சலாம்' படத்தில் இருக்க மாட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.