< Back
சினிமா செய்திகள்
விவாகரத்து குறித்து விமர்சனம் - அறிக்கை வழியாக பதில் சொன்ன ஜி.வி.பிரகாஷ்
சினிமா செய்திகள்

விவாகரத்து குறித்து விமர்சனம் - அறிக்கை வழியாக பதில் சொன்ன ஜி.வி.பிரகாஷ்

தினத்தந்தி
|
15 May 2024 1:18 PM IST

நடிகர் ஜி.வி. பிரகாஷ் அறிக்கை வெளியிட்டு விவாகரத்து குறித்த விமர்சனத்திற்கு பதிலளித்துள்ளார்.

சென்னை,

கடந்த 2013ம் ஆண்டு பாடகி சைந்தவியை, பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷ் குமார் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், இருவரும் பிரிய முடிவு செய்துள்ளதாக ஜி.வி பிரகாஷ் தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் இதனை எதிர்த்து ஜி.வி பிரகாசை பலரும் விமர்சித்து வந்தனர். இந்நிலையில், இந்த விமர்சனத்திற்கு நடிகர் ஜி.வி. பிரகாஷ் அறிக்கை வெளியிட்டு பதிலளித்துள்ளார். அதில்,

புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கபடுவது துரதிர்ஷ்டவசமானது. பிரபலமான நபராக இருப்பதாலே, ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பது ஏற்புடையதல்ல.

தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது "யாரோ ஒரு தனிநபரின்" வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா...? இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கி பழகிய நண்பர்கள், உறவினர்கள் நன்கறிவார்கள்.

அனைவரிடமும் கலந்தாலோசித்து, பின்புதான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம். எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன். ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள். தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்