நடிகை சோனாலி மரணம்; ஓட்டல் உரிமையாளர், போதைப்பொருள் வியாபாரிக்கு 5 நாள் போலீஸ் காவல்
|நடிகை சோனாலி மரணம் தொடர்பான வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பனாஜி,
அரியானா மாநில பாஜக கட்சியை சேர்ந்தவர் சோனாலி போகத் (வயது 42). இவர் டிவி விவாத நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். மேலும், டிவி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். மேலும், வெப் தொடரிலும் சோனாலி நடத்துள்ளார். இவர் 2019-ம் ஆண்டு அரியானா சட்டமன்ற தேர்தலில் ஆடம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
சோனாலி டிக்டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதள செயலிகளில் தனது வீடியோக்களை வெளியிட்டு அதிக பார்வையாளர்களையும் பெற்றுள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
இதனிடையே, கோவாவுக்கு சுற்றுலா சென்ற சோனாலி போகத் கடந்த 22-ம் தேதி இரவு மர்மமான முறையில் மரணமடைந்தார். ஓட்டலில் இரவு மது விருந்தில் பங்கேற்ற சோனாலிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் சோனாலி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
இந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சோனாலியின் தனி உதவியாளர் சுதிர் சக்வான் மற்றொரு உதவியாளர் சுக்விந்தர் சிங் மற்றும் சோனாலி தங்கி இருந்த ஓட்டல் உரிமையாளர் எட்வின் நுனீஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், உடற்கூராய்வில் சோனாலிக்கு போதைப்பொருள் கொடுக்கப்பட்டது தெரியவந்ததையடுத்து போதைப்பொருள் விநியோகம் செய்த ராம மண்ட்ரேகர், தட்டாபிரசாத் காவ்ங்கர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். சோனாலி மரண வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சோனாலி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட ஓட்டல் உரிமையாளர் எட்வின் நுனீஸ், போதைப்பொருள் வியாபாரிகள் ராம மண்ட்ரேகர், தட்டாபிரசாத் காவ்ங்கர் இன்று கோவா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி ஓட்டல் உரிமையாளர் எட்வின் நுனீஸ் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சோனாலி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்தது. இதையடுத்து, 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.